மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சகத்தின் 2ஜி ஏலத்தால் நாட்டுக்கு ரூ. 1.70 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அமைச்சர் ராஜாவின் அணுகுமுறையே இதற்கு முழுக் காரணம் என்றும் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
2008ல் நடந்த 2ஜி ஏலம் மிக மிக மட்டமான விலைக்கு விடப்பட்டது. ஆனால் அதை ஏலம் எடுத்த நிறுவனங்கள் மற்றவர்களுக்கு பல மடங்கு விலை வைத்து விற்று விட்டனர். இந்த வகையில் நாட்டுக்கு ரூ. 1.70 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளாக கணக்கு தணிக்கை அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த பெரும் தேசிய நஷ்டத்துக்கு அமைச்சர் ராஜாதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால் ராஜாவின் நிலை மேலும் சிக்கலாகியுள்ளது.
2ஜி ஏலம் தொடர்பாக, மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தனது இறுதி அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளார். அதில் உள்ள அனைத்துமே ராஜாவுக்கு எதிரானதாக உள்ளது.
அறிக்கையின் சில முக்கியப் பகுதிகள்...
2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பாக பிரதமர், சட்ட அமைச்சர், நிதியமைச்சர், தொலைத் தொடர்பு ஆணையத்தின் பரிந்துரை என எதையுமே காதில் போட்டுக் கொள்ளாமல் அனைத்தையும் நிராகரித்து விட்டார் அமைச்சர் ராஜா.
மிக மிகக் குறைந்த விலைக்கு ஏலம் கேட்ட சில குறிப்பிட்ட நிறுவனங்களை மட்டும் அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.
முழுக்க முழுக்க தன்னிச்சையாக இதை அவர் செய்துள்ளதால் இந்த பெரும் தேசிய நஷ்டத்திற்கு ராஜாவே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
அதேபோல தனது பரிந்துரைகளை தொலைத் தொடர்பு அமைச்சகம் அப்பட்டமாக மீறி செயல்பட்டுக் கொண்டிருந்ததைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது டிராய் அமைப்பு. தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் செயலை அது தடுத்து நிறுத்த முயன்றிருக்க வேண்டும்.
2008ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த 2ஜி ஏலத்தின்போது மொத்தம் 122 புதிய உரிமங்கள் வழங்கப்பட்டன. அதில் 12 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 85 உரிமங்கள் தொலைத் தொடர்புத்துறை நிர்ணயித்திருந்த தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யாதவையாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
நஷ்டத்தை கணக்கிட்டது எப்படி
மொத்தம் 3 வழிகளில் 2ஜி ஏலத்தால் நாட்டுக்கு ஏற்பட்டநஷ்டத்தைக் கணக்கிட்டுள்ளது கணக்கு தணிக்கை அலுவலகம்.
முதல் வழி - 2ஜி ஏலத்தில் பங்கேற்ற எஸ் டெல் நிறுவனம் 2007ம் ஆண்டு பிரதமருக்கும், பின்னர் தொலைத் தொடர்புத் துறை அமைச்சருக்கும் அனுப்பிய ஆஃபர் கடிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தின்படி பார்த்தால், 122 புதிய உரிமங்களின் மதிப்பு ரூ. 65,725 கோடியாக வருகிறது. ஆனால், மத்திய தொலைத் தொடர்புத் துறை வெறும் ரூ. 9013 கோடியை மட்டுமே இந்த உரிமங்களுக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து வசூலித்துள்ளது.
அதேபோல எஸ்.டெல் நிறுவனம் டூயல் டெக்னாலஜிக்கான கட்டணமாக ரூ. 24,591 கோடி தர முன்வந்துள்ளது. இதையும் சேர்த்து கணக்கிட்டால் ரூ. 90,316 கோடியாக வருகிறது.
2வது வழி - 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் கிடைத்த தொகையை ஒப்பிட்டுப் பார்த்தபோது, 2ஜி ஏலத்தால் ஏற்பட்ட நஷ்டமாக ரூ. 1 லட்சத்து 11 ஆயிரத்து 511 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.
டூயல் தொழில்நுட்ப கட்டணம் மட்டும் ரூ. 40,526 கோடி கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இதில் கிடைத்ததுவெறும் ரூ. 3372 கோடி மட்டுமே. எனவே மொத்த நஷ்டத்தின் அளவு ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 652 கோடியாகும்.
6.2 மெகாஹெர்ட்ஸுக்கும் மேற்பட்ட அலைக்கற்றை ஒதுக்கப்பட்டிருப்பதை வைத்து கூட்டிப் பார்க்கும்போது கிட்டத்தட்ட ரூ. 1 லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடி அளவுக்கு நஷ்டத் தொகை வந்து நிற்கிறது.
இதன் மூலம் முன்பு கணித்ததை விட பல ஆயிரம் கூடி கூடுதல் நஷ்டக் கணக்கு வருகிறது.
உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள், பெற்ற வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கணக்கிட்டுப் பார்த்தால், இந்தியா முழுமைக்குமான உரிமக் கட்டணம் ரூ. 7442 கோடி முதல் ரூ. 47,918 கோடியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இதை வெறும் ரூ. 1658 கோடிக்கு மட்டுமே கொடுத்துள்ளார் ராஜா.
கணக்கு தணிக்கை அதிகாரியின் இந்த இறுதி அறிக்கை பெரும் புயலைக் கிளப்பும் எனத் தெரிகிறது. சமீபத்தில்தான் இந்த ஊழல் தொடர்பான வழக்கின் விசாரணையின்போது மத்தியஅரசை கடுமையாக சாடியிருந்தது சுப்ரீம் கோர்ட்.
ஆதர்ஷ்வீட்டு வசதிக் கழக ஊழலில் சிக்கிய மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவானையும், காமன்வெல்த் ஊழலில் சிக்கிய கல்மாடியையும் காங்கிரஸ் கட்சி உடனடியாக பதவி நீக்கம் செய்துள்ளது. ஆனால் கூட்டணிக் கட்சியான திமுகவைச் சேர்ந்த ராஜா மீது கை வைக்க முடியாமல் கடுமையாக திணறி வருகிறது மத்திய அரசு. ஆனால் கணக்கு தணிக்கை அதிகாரியின் இறுதி அறிக்கையில் நஷ்டக் கணக்கு 1 லட்சம் கோடிக்கும் மேல் காட்டப்பட்டிருப்பதால் ராஜா மீதான நெருக்குதல் அதிகரித்திருப்பதாக கருதப்படுகிறது.
அடுத்த சுப்ரீம் கோர்ட் அமர்வுக்கு முன்பாக ராஜா மீது நடவடிக்கை எதையாவது எடுத்தாக வேண்டிய கட்டத்திற்கு தற்போது மத்திய அரசு தள்ளப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.
இந்தியா வாங்குற கடன் எல்லாமே, இவங்க கொள்ளையடிக்கதான்..
இவங்க மாதிரி ஆளுங்க இருக்குற வரைக்கும், இந்திய முன்னேறது ரொம்ப கஷ்டம்
Sunday, November 28, 2010
Subscribe to:
Posts (Atom)