மாவீரர் தினத்துக்கு இன்னும் 14 தினங்களே உள்ள நிலையில், அந்த தினத்தின் உரையை வாசிக்கப் போவது யார் என்ற பரபரப்பான கேள்வி உலகெங்கும் உள்ள தமிழர் மத்தியில் மட்டுமல்ல, இலங்கை விவகாரங்களை கவனித்து வரும் சர்வதேசத்தினர் மனதிலும் எழுந்துள்ளது.
இந்த ஆண்டு மாவீரர் தினத்தில் பொட்டு அம்மான்தான் இந்த வரலாற்றுப் புகழ்மிக்க உரையை வாசிக்கப் போகிறார் என்று செய்திகள் வெளி வந்தவண்ணமுள்ளன. ஆனால் இலங்கை அரசோ பொட்டு இறந்துவிட்டார் என்று ஒரு முறையும், அவர் இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை என்றும் மாற்றி மாற்றி கூறி வருகிறது.
இந் நிலையில் மாவீரர் தின உரை நிகழ்த்தப் போவது யார் என்பது குறித்து ஆனந்த விகடன் வார இதழ் வெளியிட்டுள்ள கட்டுரை தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘வருகிறார் பொட்டு…’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்தக் கட்டுரை:
“போர்க் காலமோ, கார் காலமோ ஈழத் தமிழர்களுக்கு நவம்பர் மாதம் எப்போதும் கொண்டாட்டமான மாதம். காரணம், மாவீரர் தினம். நவம்பர் மாதம் 22ம் தேதி தொடங்கும் அந்த விழா 27ம் தேதி மாலையுடன் முடிவடையும். ‘தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே!’ என்ற பாடலின் பின்னணியில் பிரபாகரன் தோன்றிப் பேசுவார்.
புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் அந்த நேரத்துக்காகத் தவம் இருப்பார்கள். அதற்கு முந்தைய 26ம் தேதிதான் பிரபாகரனின் பிறந்த நாள். கடந்த ஆண்டு போர்க் கால நெருக்கடி சூழ்ந்த நேரத்திலும், பிரபாகரன் தோன்றினார்.
‘சமாதானத்துக்கான வாசல்களைத் திறந்து வைத்திருக்கிறோம். ஆனாலும், எம் எதிரி போரை நிறுத்துவதாகத் தெரியவில்லை. இந்தியாவை நட்பு சக்தியாகத்தான் நினைத்தோம். நினைக்கிறோம். இந்தியா எங்களுக்கு தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும். இந்நிலையில் புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களுக்குத்தான் நான் மிகுந்த நன்றியைச் சொல்ல வேண்டும். அவர்கள் ஆதரவுதான் அனைத்துக்கும் மேலாக முக்கியமானது!’ என்றார் பிரபாகரன்.
ஆனால், புலிகள் இயக்கம் மீண்டு எழ முடியாமல் முடக்கப்பட்டது. பிரபாகரன் இறந்ததாக அறிவிக்கப்பட்டார். புலம்பெயர்ந்த தமிழர்கள் இதை நம்பவில்லை என்றாலும், நவம்பர் 27 அன்று பிரபாகரன் திரையில் தோன்றுவாரா என்ற எதிர்பார்ப்பும் குழப்பமும் ஆரம்பித்திருக்கிறது.
‘பிரபாகரன் வர மாட்டார். ஆனால், பொட்டு அம்மான்தான் இந்த வருட மாவீரர் தின உரையை நிகழ்த்தவிருக்கிறார்!’ என்ற தகவல் பரவி வருகிறது. அந்தத் தகவலுக்கு வலு சேர்க்கும் ஆதாரங்களுள் ஒன்றாக பிரபாகரனும் பொட்டு அம்மானும் இருக்கும் புதிய படம் ஒன்றைப் புலிகள் ஆதரவு இணையதளங்கள் வெளியிட்டுள்ளன. இதுவரை வெளிவராத அந்தப் படத்துக்கு மேலே, ‘இந்தப் படம் சொல்லும் தகவல் என்ன?’ என்ற புதிரான கேள்வியும் தொக்கி நிற்கிறது.
இதுபற்றி விசாரித்தபோது, ‘மே 18ம் தேதி சிங்கள ராணுவத்துக்கும் புலிகள் அமைப்புக்கும் நடந்த இறுதி யுத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. புலிகள் அமைப்பின் முக்கியத் தளபதிகள் அழிக்கப்பட்டதாகவும் நந்திக் கடல் வழியாக பிரபாகரன் தப்பிக்க முயற்சித்தபோது சுட்டுக் கொன்றதாகவும் அறிவித்தார்கள்.
இவை எல்லாம் நிகழ்வதற்கு ஒரு வாரத்துக்கு முன், புலிகள் அமைப்பின் முக்கியப் பொறுப்பாளர்களை மட்டும் அழைத்தாராம் பிரபாகரன். ‘இன்று முதல் மூன்று பிரிவுகளாக நாம் பிரிந்து செயல்பட வேண்டும். ஒரு அணியினர் இங்கிருந்து சிங்கள ராணுவத்துடன் போராடட்டும். இன்னொரு பிரிவினர் அரசிடம் சரணடைந்து தங்களது அரசியல் கோரிக்கையை உலகத்துக்குச் சொல்லட்டும். மூன்றாவது பிரிவினர் இங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டும். இதில் யார் யார் எந்தப் பிரிவில் சேர்க்கப்படுவார்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. நான் எனது நிலையைத் தீர்மானித்துக் கொள்கிறேன். இனி, உங்களை வழிநடத்தும் பொறுப்பை பொட்டு அம்மானிடம் ஒப்படைக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த இயக்கத்தின் துணைத் தலைவராக அவர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்!’ என்று அறிவித்தாராம் அப்போது.
இயக்கத்தின் தளபதிகளும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டனராம். அப்போது எடுக்கப்பட்ட படத்தில்தான் பிரபாகரனுக்குச் சரிசமமாக பொட்டு உட்கார வைக்கப்பட்டார். இதில் பல ஆச்சர்யமான விஷயங்கள் உண்டு!’ என்ற பீடிகை கொடுத்து நிறுத்தியவர்கள் மேலும் தொடர்ந்தார்கள்…
‘பொதுவாக பொட்டு அம்மான், புலிகளின் சீருடையைத்தான் எப்போதும் அணிவார். சாதாரண உடைகள் அணிந்து அவரைப் பார்க்கவே முடியாது. அரிதாக டி-ஷர்ட் அணிவார். இந்தப் படத்தில் பிரபாகரன் அணிந்துள்ள அதே நிறத்தில் சட்டை அணிந்துள்ளார். மேலும், பொட்டு அம்மான் எப்போதும் கறுப்பு நிற வார் வைத்த சாதாரண வாட்ச்தான் அணிவார். சில்வர் செயின் வாட்ச் அணிந்தால் தனிப்பட்ட அடையாளமாகிவிடும் என்பதால், அதை அணியவே மாட்டார். ஆனால், இப்படத்தில் அதிலும் மாற்றம். சிரித்த முகத்துடன் இருக்கும் அவர் சீரியஸான முகத்துடன் காணப்படுகிறார். இப்படி எத்தனையோ மாற்றங்களை அடுக்கலாம். மிக நெருக்கடியான தருணத்தில் எடுக்கப்பட்ட இப்படம், ஆறு மாதங்கள் கழித்து வெளியானதற்கான பின்னணி ‘நவம்பர் 27ம் தேதியாக இருக்கலாம்!’ என்று முடித்தார்கள்.
இலங்கையில் தேர்தல் நடந்து முடியும் வரை அரசியல் நிலவரங்களைக் கவனித்துவிட்டு அதன் பிறகு வெளிப்படையாகச் சில அறிவிப்புகளைச் செய்ய புலிகள் அமைப்பினர் முடிவெடுத்திருந்தனராம். ஆனால், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.
குமரன் பத்மநாபன் எனப்படும் கே.பி.அணியினர், காஸ்ட்ரோ அணியினர் என இரண்டு தரப்பாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இதைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் யாராவது ஒருவர் வெளிப்படையாக வந்து அறிவித்தால்தான் குழப்பங்களைத் தவிர்க்க முடியும் என்று முடிவெடுத்துள்ளார்கள். அதன் அடிப்படையில் பொட்டு வெளியில் வர இருப்பதாக நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
அதே சமயம், ‘பொட்டு அம்மான் இறந்தது உண்மை. ஆனால், அவரது உடலைத்தான் எங்களால் அடையாளம் காண முடியவில்லை!’ என்று இலங்கையின் பாதுகாப்பு ஆலோசகர் கோத்தபய ராஜபக்ஷே சொல்லி வருகிறார். தமிழக எம்.பிக்கள் குழு அங்கு சென்றபோதும், ‘பிரபாகரனது உடலை நாங்கள் அடையாளம் கண்டுவிட்டோம். ஆனால், பொட்டு பற்றித்தான் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை!’ என்று அரசியல் ஆலோசகர் பசில் ராஜபக்ஷே சொல்லியிருக்கிறார். எனவே, பொட்டு அம்மான் குறித்த சந்தேகங்கள் இன்னமும் முழுக்க களையப்படவில்லை என்பது உண்மை.
புலிகள் அமைப்பின் ஆரம்பக் கட்டத்தில் பிரபாகரன் தலைமையிலான மத்தியக் கமிட்டியில் 32 உறுப்பினர்கள் இருந்தார்கள். அதில் சண்முகலிங்கம் சிவசங்கரன் என்ற இளைஞன்தான் பின்னாட்களில் பொட்டு அம்மானாக உருவெடுத்தார். புலிகள் அமைப்பு மீது சிங்கள ராணுவத்தின் கவனத்தை அதிர்ச்சியுடன் திருப்பிய திருநெல்வேலி தாக்குதலில் இவர் இருந்தார்.
பிரபாகரனிடம் ஆயுதப் பயிற்சி பெற்று, பின்னர் அவருக்கே மெய்க்காப்பாளராக இருந்தவர். வேதாரண்யம் பகுதியைக் கவனித்து வந்தவர். பின்னர் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மாவட்டத் தளபதியாக ஆனார். வேவு பார்ப்பதில் தேர்ந்தவராக இருந்ததால், புலிகளின் புலனாய்வுப் பிரிவை பொட்டுவிடம் ஒப்படைத்தார் பிரபாகரன். 1988ம் ஆண்டு இப் பொறுப்புக்கு வந்த பொட்டு 16 பிரிவுகளை உருவாக்கி, புலிகளின் திரைமறைவு வெற்றிகளுக்குப் பெரிதும் உதவினார்.
இந்திய அமைதிப் படைக்கும் புலிகளுக்கும் சண்டை தொடங்கியபோது, முதல் தாக்குதலில் பலத்த காயம்பட்டு முடக்கப்பட்டார் பொட்டு. வயிறு, கால், கை ஆகியவற்றில் பலத்த காயம் பட்டது. மரணத் தறுவாயை நெருங்கியவரை மிகுந்த சிரமத்துக்குப் பிறகு மீட்டெடுத்து வந்தார்கள். அந்தச் சமயத்தில், அவரை அருகிலிருந்து கவனித்துக்கொண்டவர் பாலசிங்கத்தின் மனைவி அடேல்.
ராஜீவ் காந்தி கொலையில் பொட்டு அம்மானைத் தொடர்புபடுத்தி சி.பி.ஐ. குற்றச்சாட்டு பதிவு செய்தபோதுதான், இப்படியரு ஆள் இருப்பதே வெளியில் தெரிந்தது.
மூன்று ஆண் பிள்ளைகள் பொட்டு அம்மானுக்கு. அதில் இருவர் அமைப்பில் இணைந்து போராடி இறந்துவிட்டார்களாம். ஒரு மகன் மட்டும் இருக்கிறார். ‘குடும்பத்துக்கு ஒருவரை இயக்கத்துக்குத் தந்தால் போதுமே. இன்னொரு மகனை எங்காவது படிக்க வைக்கலாமே!’ என்று பொட்டு அம்மானிடம் சொன்னதற்கு, ‘அதெல்லாம் மற்றவர்களின் குடும்பத்துக்கு. எனது குடும்பத்தினர் அனைவருமே இயக்கத்துக்குத்தான்!’ என்றாராம் பொட்டு.
10 ஆண்டுகளுக்கு முன் பொட்டு அம்மானைப்பற்றி தனது புத்தகத்தில் இப்படிக் குறிப்பிட்டு இருக்கிறார் அடேல் பாலசிங்கம், ‘சுற்றி வளைப்புகளில் இருந்து எதிரிகளைத் திணறடித்து வெளியேறுவதில் அவருக்குப் பல ஆண்டு அனுபவம் உண்டு!’
அடேல் சொன்னது இப்போதும் நடந்திருக்குமா? நவம்பர் 27ம் தேதிமுடிவு தெரியும்!”
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment